நெல்லை, தூத்துக்குடியில் பிசான சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் திறப்பு

விகேபுரம்: பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு  தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி பாபநாசம் அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து  வைத்தார். அதே போன்று மணிமுத்தாறு, சேர்வலாறு அணையில் இருந்தும் தண்ணீர்  திறக்கப்பட்டன.

இதன் மூலம், தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால், வை தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் ஆகிய கால்வாய்களுக்கு நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ம் தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை உள்ளடக்கிய பகுதிகள்,  தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பிசான சாகுபடிக்கும், நாற்று பாவுதல், நடவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் சேர்த்து மொத்தம் 19 ஆயிரத்து 604 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.

அணை திறப்பு நிகழ்ச்சியில் நெல்லை  கலெக்டர் விஷ்ணு, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப், சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம்,   மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், பாளை. யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான கேஎஸ் தங்கபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பத்மா,  செயற்பொறியாளர்  மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன்,  பேச்சிமுத்து, முருகன்,  உதவி பொறியாளர் மகேஸ்வரன், ஜெயகணேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர்  முருகானந்தம், உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, வேளாண்மை அலுவலர் ஜாஹித்  முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் சாந்தி,  விஜயலட்சுமி, மின்வாரிய செயற்  பொறியாளர் வெங்கடாசலம், உதவி  செயற்பொறியாளர் அழகு ராணி, உதவி பொறியாளர்  விஜயராஜ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன்,  தாசில்தார் விஜயா, ஆர்ஐ இசக்கி, பாளை. மத்திய ஒன்றிய செயலாளர் போர்வேல் கணேசன், களக்காடு ஒன்றிய திமுக செயலாளர் ராஜன்,  ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் கனியப்பா, செவல் சுரேஷ், தெற்குப்  பாப்பான்குளம் முன்னாள் தலைவர் ஆறுமுகம், விகேபுரம் கவுன்சிலர்  குட்டி  கணேசன், வைகுண்ட ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: