×

எர்ணாவூரில் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக பிரியாணிக்கடை உரிமையாளரை வெட்டி கொன்றது அம்பலம்: ஒருவர் கைது, 4 பேர் சரண்

பெரம்பூர்: அரும்பாக்கம் ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் கனி (32) இவருக்கு கத்திஜா என்ற மனைவியும், முகமது அகில், முகமது ஆதில் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.  நாகூர் கனி மீது அமைந்தகரை மற்றும் அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிறு, சிறு வழக்குகள் உள்ளன. இவர் அயனாவரம் யுனைடெட் இந்தியா நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பிரியாணிக்கடை நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் 2ம் தேதி இரவு தனது பிரியாணி கடை முன்னால் நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வியசார்பாடியை சேர்ந்த கரண்குமார் என்பவனை தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஜூலை மாதம் எர்ணாவூர் பகுதியில் மசூதிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜமாத் உறுப்பினரான உமர் பாஷா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்க நாகூர் கனி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

உமர் கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உமரை கொலை செய்ய ரூட் போட்டுக் கொடுத்தது நாகூர் கனி என்பதால் அவரை கொலை செய்ய உமரின் உறவினர்களான ஜீலன் மற்றும் ஹுசைன் ஆகியோர் திட்டமிட்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட எர்ணாவூர் உமர் பாஷாவும், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நாகூர் கனியும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.

இந்த, நிலையில் ஒரே ரவுடி கும்பலில் இருந்தாலும், சில ஆண்டுகளாகவே உமர் பாஷாவுக்கும், நாகூர் கனிக்கும் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. அதனால் திட்டமிட்டு உமரீன் இருப்பிடத்தை,  எதிர் அணியை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்ததாகவும், அவரது காதலியை சந்திக்க செல்லும் நேரத்தை தெரிவித்து, கொலை செய்ய ரூட் எடுத்து கொடுத்துள்ளதும் தெரியவந்ததால் அவரது தம்பி ஹீசைன் மற்றும் மைத்துனர் தமீம் ஜீலன் ஆகியோர் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இக்கொலை, வழக்கு தொடர்பாக அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தமீம்ஜீலன், எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ஹுசைன், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆசை, வடபழனியை சேர்ந்த அகஸ்டின், நீலாங்கரையை சேர்ந்த அஜித் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில்,

ஹீசைனை தவிர மற்ற 4 பேரும் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த பின் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அயனாவரம் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள உமரின் சகோதரரான ஹுசைன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Biryani ,Ernavur , Biryani stall owner hacked to death in revenge for Ernavur murder: One arrested, 4 surrendered
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!