×

ராயபுரம் பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி: எம்எல்ஏ ஆய்வு

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாமன்ற உறுப்பினர்களும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதன்படி ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்து உடனடியாக மழைநீரை அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னை மாநகராட்சி 52, 53வது ஆகிய வார்டு பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டு வருவதை, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். தங்கசாலை, அரசு ஐடிஐயில் ஒர்க்ஸ்சாப் பகுதியில் மேற்கூரை பழுது ஏற்பட்டு மழைநீர் கசிவு ஏற்படுகிறது. இதனை துறை அமைச்சரிடம் கூறி, புதிய மேற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் காட்பாடா, ராமதாஸ் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ராட்சச மின்மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சரி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.  ஆய்வின்போது, ராயபுரம் பகுதி செயலாளர் வ.பே.சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் உடனிருந்தனர்.

Tags : Rayapuram , Rainwater Drainage Work in Rayapuram Areas: MLA Survey
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...