ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மறுவளர்ச்சி திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அம்ருத் திட்டத்தின் கீழ், சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மறுவளர்ச்சி திட்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு  துறைகளின் அதிகாரிகள், ஜார்ஜ் டவுன் பகுதியை சார்ந்த மக்கள், வணிகர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலர் ஹிதேஸ்குமார் ஷி மக்வானா கூறியதாவது: இந்தியாவில் அம்ரித்சர், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களின் சில பகுதிகளில் மறுவளர்ச்சி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த சூழ்நிலைக்கேற்ப தேவைகள், வசதிகளை மனதில் கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகரமாக ஜார்ஜ் டவுன் இருந்தது. தற்போது, நவீன கால தேவைகளுக்கேற்ப சீரமைக்க ஜார்ஜ் டவுன் மறுவளர்ச்சி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை பெற்று, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனைத்தொடர்ந்து, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பழைய பகுதிகளுக்கும், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பழைய பகுதிகளுக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

Related Stories: