நன்னடத்தை வீதிமீறிய ரவுடிக்கு 272 நாள் சிறை

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை, மூப்பனார் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜா (எ) லஷ்மணன் (20). இவர் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி வழக்கு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி முன்பு, ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர், குற்றவாளியை  சாட்சிகளுடன் ஆஜர் செய்தனர். அப்போது, லஷ்மணன் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால், அதைமீறி கடந்த மாதம் 26ம் தேதி துர்கா லட்சுமி என்பவரின் பைக்கில் வைத்திருந்த செல்போனை திருடியதால், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய வண்ணாரப்பேட்டை  துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி,  லஷ்மணனை 110ன் பிரிவின் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 272 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்பேரில் லஷ்மணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: