தாம்பரம் விமானப்படை தளம் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை: கலெக்டர் உறுதி

தாம்பரம்: தாம்பரம் விமானப்படை தளம் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உறுதியளித்துள்ளார். கிழக்கு தாம்பரம், ஐஏஎப் சாலையில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குப்பைகளை கொட்டும்போது அதில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதற்காக ஏராளமான பறவைகள் வருவதாகவும், அதேபோல விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் ஏரிகளில் உள்ள ஆகாய தாமரை செடிகளில் வந்து அமர்ந்து மீன்கள் பிடித்து உண்ணுகிறது.

இதனால், விமானப்படை தளத்திலிருந்து விமானங்கள் பறந்து செல்லும்போது பறவைகளால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தாம்பரம் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள தாம்பரம் மாநகராட்சி, திருவஞ்சேரி, அகரம் தென், வண்டலூர், முடிச்சூர், நெடுங்குன்றம் ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானப்படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் விமான சுற்றுச்சூழல் குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், உள்ளாட்சி அமைப்புகள் விமானப்படை தளத்தை சுற்றி குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். கூட்டத்தில், விமானப்படை அதிகாரி நாகராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: