×

13 இடங்களில் உடனடி புக்கிங் மையம் சபரிமலைக்கு அனைத்து வழிப்பாதைகளும் திறப்பு: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் நாகர்கோவிலில் பேட்டி

நாகர்கோவில்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 16ம்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. வரும் 17ம்தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 அன்று இரவு திருநடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திருநடை திறக்கப்படும். ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க மகரவிளக்கு ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 13 இடங்களில் உடனடி (ஸ்பாட்) புக்கிங் மையம் அமைக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்து வர வேண்டும். கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை. கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை - புல்மேடு மற்றும் எருமேலி - அழுதா - கரிமலை பாதைகள் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.

 சன்னிதானத்தில், ஐயப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம். அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை அதிகாரிகள், நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அன்னதானம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* புக்கிங் மையங்கள் அமையும் 13 இடங்கள் எவை?
உடனடி புக்கிங் மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் விபரம் :
திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கண்டேஸ்வரம் சிவன் கோயில், கொல்லம் மாவட்டத்தில்  கொட்டாரக்கரா மகா கணபதி கோயில், பத்தன்திட்டா மாவட்டத்தில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோயில், ஆலப்புழா மாவட்டத்தில்  செங்கனூர் ரயில் நிலையம், கோட்டயம் மாவட்டத்தில் எருமேலி கோயில், எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைக்கம் மகாதேவர் கோயில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டி பெரியார் ஆகிய இடங்களில் உடனடி பதிவு மையம் அமைக்கப்படுகிறது. ஆதார் கார்டு, லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை அடையாள சான்றாக கொண்டு வர வேண்டும்.

* நிமிடத்திற்கு ஒரு பேருந்து
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும். எல்லையோர செக்போஸ்ட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை செல்லும்  வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்படும். வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படும்.

Tags : Sabarimala ,Travancore ,Devasam ,Board ,Nagercoil , Instant booking center at 13 places All routes open to Sabarimala: Travancore Devasam Board President Interview at Nagercoil
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு