×

அனுமதியற்ற கட்டிடத்தை இடிப்பதே சட்டம்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அனுமதியற்ற கட்டிடத்தை இடிப்பதே சட்டம் என்றும், கட்டுமானப் பணி முடிந்ததற்கான சான்று வழங்கிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சி  உய்யகொண்டான் திருமலை கிராமத்தில் 51.08 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதற்காக முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை அகற்றவும், இதை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர், ‘‘முறையான அங்கீகாரம் இன்றி கட்டிடம் கட்டலாம். பின்னர் அதில் குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற மனநிலையை அதிகாரிகள் ஊக்குவிக்கக்கூடாது. அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சட்டம். கட்டிடம் முறையாக கட்டப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து, பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

நகரத்தின் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே, அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான பணி முடிந்ததற்கான சான்று வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்தது தொடர்பான அறிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் ெசய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 10க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Govt , Demolition of unauthorized building is law: ECtHR orders Govt
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்