மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் மாணவியின் தந்தையை தாக்கி போதை வாலிபர்கள் கலாட்டா: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

மதுரை: மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் மாணவியின் தந்தையை போதைக் கும்பல் பட்டப்பகலில் சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வந்தது. இதன் முன்பாக சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கத்திக் கொண்டும் கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அதிவேகமாக வந்த டூவீலர்களைக் கண்டு அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.

அப்போது கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை, டூவீலரில் கத்தி கொண்டு வந்த குடிமகன்களை பார்த்து, ‘‘ஏம்பா இப்படி போறீங்க...? கத்தாம, அமைதியா போகலாம்ல...’’ என்றார். இதில் ஆத்திரமடைந்த போதைக் கும்பல், உடனே தங்களது வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை தாங்கள் வைத்திருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே செல்லூர் போலீசார் இச்சம்பவத்தின் பேரில் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

மதுரையில், இதேபோல் கடந்த வாரம் ஒரு கும்பல், சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாதுகாவலரை தாக்கியதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது, இதன்பேரில் 9 இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில் அரசு மகளிர் கல்லூரி முன்பு போதை இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டு, மாணவியின் தந்தையை தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: