சென்னை பூக்கடை தங்கசாலை தெருவில் பழைய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து 2 பேர் பலி: 2 பேர் படுகாயம்

சென்னை: சென்னை தங்கசாலையில் பழைய கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை என்எஸ்சி போஸ் சாலை - தங்கசாலை சந்திப்பில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் கோயில் அக்ரஹாரம். இங்கு பழைய வீடு ஒன்று உள்ளது. மேலே வீடும் கீழ்பகுதியில் 7 கடைகளும் உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென மொத்தமாக இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த கங்குதேவி (60), பெரும்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (36), சரவணன் (34), சிவகுமார் (32) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.   

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் மீட்டனர். இதில் கங்குதேவி உயிரிழந்தார். சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். சரவணன், சிவகுமார் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூக்கடை துணை ஆணையர் சாம்சங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

வீடு இடிந்து விழுந்த தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் என்எஸ்சி போஸ் சாலை, தங்க சாலை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தொடர் மழை காரணமாக இந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து யானை கவுனி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அமைச்சர் சேகர்பாபு நேற்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: