×

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் கேட்டு மாணவர்களிடம் நிர்ப்பந்தம்: அரசு தீர்வு காண கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர். தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.5.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிக கட்டணம் வசூலித்தால் தேர்வுக்குழு அல்லது கட்டணக் குழுவிடம் புகார் அளிக்கலாம் என தேர்வுக்குழு செயலர் தெரிவித்திருந்தார். எனினும், கூடுதல் தொகையைச் செலுத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ப்பந்திப்பது பெற்றோரை வேதனையடையச் செய்துள்ளது. இதேபோன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த மருத்துவக்கல்லூரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சமும், பல் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வேண்டும். அதேபோன்று, தமிழக அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்கின்றனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.

Tags : K.K. ,S.S. ,Analakiri , Students forced to charge extra fees in private medical colleges: KS Alagiri pleads with the government to find a solution
× RELATED கருப்பு பணத்தை மீட்கவில்லை,...