×

சென்னையில் தமிழ்மொழி அறிஞர் க.நெடுஞ்செழியன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்மொழி அறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான க.நெடுஞ்சழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர். ‘இந்திய பண்பாட்டில் தமிழும் தமிழகமும்’, ‘தமிழ் எழுத்தியல் வரலாறு’ போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறையின் 2006ம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மானிடவியலில் பரிசை பெற்றவர். 2021ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக நெடுஞ்செழியன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. க.நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்மொழி அறிஞரும், தமிழின அரிமாவுமான பேராசிரியர் - முனைவர் க.நெடுஞ்செழியனின் மறைவு அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ வழங்கினேன். அப்போது, சக்கர நாற்காலியில் வந்து அவர் விருதைப் பெற்றுக் கொண்டார். அவரது நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய கொடையாகும். ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற அவரது நூலை ‘அன்பகத்தில்’ வெளியிட்டு உரையாற்றும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்.

அவரது உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நலம் பெற ஏற்பாடுகளைச் செய்தோம். அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார். க.நெடுஞ்செழியனின் அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவவே செய்யும். ‘தமிழ் மரபும், பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்’ என்று இனமானப் பேராசிரியர் அன்பழகனால் போற்றப்பட்ட க.நெடுஞ்செழியனின் புகழ் வாழ்க. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : K. Nedunchezhiyan ,Chennai ,Chief Minister ,M. K. Stalin , Death of Tamil language scholar K. Nedunchezhiyan in Chennai: CM M. K. Stalin's condolence
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...