×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை விவகாரம் ஐஜி முருகன் மீதான புகாரை விரைந்து விசாரிக்க வேண்டும்: சிபிசிஐடி, விசாகா கமிட்டிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஐஜி முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்பி கடந்த 2018ம் ஆண்டில் புகார் அளித்தார். புகாரின் மீது அரசு  நடவடிக்கை எடுக்காததால் பெண் எஸ்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, 2019ம் ஆண்டு ஐ.ஜி.முருகன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஐஜி முருகன் மீதான புகாரை விசாரிப்பதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டதாக கூறி அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு ஐஜி முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது அந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் ஐஜி மீதான புகாரை தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமென்று சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டிக்கு  உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : IG Murugan ,HC ,CBCID ,Visakha , Sexual harassment case against woman SP to investigate complaint against IG Murugan expeditiously: HC directs CBCID, Visakha committee
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...