×

வணிக ரீதியாக பயன்படுத்தும் பிரீமியம் பால் விலை மட்டுமே உயர்வு: அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம்

சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தும் பிரீமியம் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம் அளித்தார். ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உற்பத்தியின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் கொள்முதல் 32 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4,20,000 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். பசும் பால் கொள்முதல் விலை 32 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும், எருமை பால் 41 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. புல் கிரீம் பிரீமியம் பால் (ஆரஞ்சு நிற ஆவின் பால்) விற்பனை விலை மட்டும் ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. விலை மாற்றத்திற்குப் பிறகும், ஆவின் நிறைகொழுப்பு பால் விலை தனியாரோடு ஒப்பிடுகையில் ரூ.24 வரையில் குறைவு. மற்ற 2 வகையான பால் விலையில் மாற்றமில்லை.

குஜராத், கர்நாடகா போன்ற பாஜ ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் விலை ரூ.10 குறைவு. ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48 ரூபாய்க்கு சில்லரையாக விற்கப்படும் நிலையில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமும் இன்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.48 மட்டுமே புதுப்பிக்கப்படும். சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே 60 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் மட்டுமே வாங்கி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் விலை திட்டவட்டமாக உயர்த்தப்படாது. ஆவின் டிலைட் பால் 90 நாட்கள் வரை கெடாத வகையில் பதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Minister ,S.M. Nassar , Only premium milk price for commercial use will increase: Minister S.M. Nassar explained
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்