பேராசிரியர்களின் பணிமூப்பில் முதலில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரை நியமிக்க வேண்டும்: ஆதிதிராவிடர் மாநில ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு 1998-99ல் நிரப்பப்படாத 100 பின்னடைவு பணியிடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 26-1-1999 அன்றும், அப்போதைய பொதுவான 147 நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களுக்கு மார்ச் 1999ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மொத்தம் 247 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் தேர்வு செய்து இரு பிரிவினருக்கும் தனித்தனியாக பட்டியலை வெளியிட்டது. இரு பிரிவுகளிலும் தேர்வானோர் 21.8.2000 அன்று பணியில் சேர்ந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ் துறையில் துறை தலைவர் பொறுப்பை பணிமூப்பு பட்டியலில் மூத்தவரான ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த இணை பேராசிரியர் சாந்தியை புறக்கணித்துவிட்டு, பணிமூப்பில் இளையவரான இரா.வரதராஜனுக்கு துறை தலைவர் பொறுப்பை கல்லூரி முதல்வர் கொடுத்துள்ளார். எனவே இந்த தேர்வில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மு.கண்ணையன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் மனு செய்திருந்தார்.

1998-99ல் நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கு (தற்போது உதவி பேராசிரியர்கள்) முந்தைய ஆண்டுகளில் நியமிக்கப்பட்டோர் தற்போது பணியில் தொடர்வதால் பணி மூப்பு தொடர்பான பிரச்னை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் மட்டும் எழுந்துள்ளது. ஆகவே, தற்போது நடைமுறையில் உள்ள அரசு பொதுச் சார்பு நிலை பணி விதிகளையே பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வலியுறுத்தியதை ஏற்றுக் கொண்டு, அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

இருப்பினும், உதவி பேராசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதால் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பதில் இருக்கின்ற சிக்கல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டதாகவும் அவர் கூறினார். மேற்குறிப்பிட்ட இரு பிரிவினர்களின் பணி மூப்பு பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கலாம். ஆனால் 1998-99ல் நியமிக்கப்பட்டோருக்கு அன்று முதல் இன்று வரை சுமார் 22 ஆண்டுகளாக பணிமூப்பு பட்டியலை தயாரிக்காமல் இருப்பது, நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பேராசிரியர்களுக்குரிய உரிமைகளை மறுப்பதாக ஆணையம் கருதுகிறது. மேலும், எந்த அதிகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் பணிமூப்பை தீர்மானித்தார் என ஆணையம் வினவியது.

எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம் கொடுத்த மனுவின் தற்போதைய உண்மை நிலவரத்தையும் சூழலையும் கணக்கில் கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், அரசாங்கம் முடிவு எடுக்கின்ற வரை, 1998-99ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களின் பணிமூப்பில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களில் முதலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பேராசிரியர்களை நியமிக்கவும், பின்னர் அப்போதைய நிரப்பப்படாத பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை இரண்டாவதாகவும் பட்டியலிட வேண்டும் என ஆணையிட்டது. இதனால் பாதிக்கப்படுவோர் உரிய தீர்ப்பாயத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியது. இதுதொடர்பான அறிவுறுத்தல்களை கல்லூரி கல்வி இயக்குநர் கல்லூரிகளுக்கு அனுப்பி, அதன் அறிக்கையை ஆணையத்துக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

Related Stories: