×

டிவிட்டரில் ஆட்குறைப்பு துவங்கியது இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம்: அலுவலகத்துக்கு வர தடை

புதுடெல்லி: டிவிட்டரில் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதில், இந்திய ஊழியர்கள் அதிகளவில் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை, எலான் மஸ்க் ரூ.3.6 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார். அதை வாங்கியதில் இருந்தே டிவிட்டரில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரை மஸ்க் வாங்கிய முதல் நாளே, தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற உயர்மட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

டிவிட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு இதற்கு முன் கட்டணமின்றி இருந்தது. இப்போது, அதை கட்டண வரம்பிற்குள் மஸ்க் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி டிவிட்டரில் ஆட்குறைப்பு செய்வதற்கான நடவடிக்கை, உலகளவில் நேற்று முதல் தொடங்கியது. இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் நேற்று முன்தினம் இமெயிலில் தகவல் அனுப்பப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமையான நேற்று அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஊழியர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து கலக்கத்தில் உள்ளனர்.

அப்படியே திரும்பி வீட்டுக்கு போங்க...
ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:
* டிவிட்டர் சிஸ்டம்கள், வாடிக்கையாளர்கள் தகவல்கள், பணியாளர்களின் பாதுகாப்பு கருதி டிவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும்.
* தாங்கள் அலுவலகத்தில் இருந்தாலோ, அலுவலகத்துக்கு செல்லும் வழியில் இருந்தாலோ உடனே வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள்.

* வேற வாய்; நாற வாய்
டிவிட்டரை வாங்கும் முன்பாக, அதன் கருத்து சுதந்திர கொள்கை பற்றி எலான் மஸ்க் கடுமையாக சாடி வந்தார். ஆனால், டிவிட்டரை தற்போது அவர் வாங்கிய பிறகு, அவருடைய இந்த கொள்கை மாறி விட்டது. வேலை நீக்க நடவடிக்கை பற்றி சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பேசக் கூடாது என தனது ஊழியர்களுக்கு அனுப்பிய உத்தரவில் அவர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

Tags : Twitter ,India , Downsizing began at Twitter, more employees were laid off in India: Banned from coming to the office
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு