கொசு வலை கேட்டு கெஞ்சும் தாவூத் கூட்டாளி; ஜெயில்ல கொசுக்கடி தாங்க முடியலய்யா...! நிராகரித்தது நீதிமன்றம்

மும்பை: சிறையில் கொசு வலை கேட்டு கெஞ்சிய தாவூத் இப்ராகிம் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா, சாகடித்த கொசுக்களை ஆதாரமாக காட்டியும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இஜாஸ் லக்டவாலா. தாவூத் உத்தரவின் பேரில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பெரிய தாதாவான இஜாஸ், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தலோஜா சிறையில் பயங்கர கொசுத் தொல்லை உள்ளது.

கொசுக்கடியால் பல வியாதிகள் பரவுகின்றன. தினமும் இரவு தூங்க முடியவில்லை. எனவே, சிறையில் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 2020ல் நீதிமன்ற காவலில் வைத்திருந்த போது, கொசு வலை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல், பாதுகாப்பு காரணம் காட்டி கொசு வலையை சிறை அதிகாரிகள் மறுக்கின்றனர்,’என தெரிவித்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சிறையில் சாகடித்த கொசுக்களை டப்பா ஒன்றில் அடைத்து வைத்து அதை லக்டவாலா நீதிமன்றத்தில் ஆதாரமாக தந்தார். ஆனாலும் நீதிபதி, இஜாசின் கோரிக்கையை நிராகரித்தார்.

கொசு வலைக்கு பதிலாக கொசு விரட்டி கிரீம்கள், கொசு வர்த்தியை பயன்படுத்த அனுமதிக்க கோரினார். மேலும், கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் சிறை துறைக்கு உத்தரவிட்டார். இஜாசை போல் தலோஜா சிறையில் உள்ள பல கைதிகள் கொசு வலை கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: