×

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி; இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி பிரதமராகிறார் நெதன்யாகு

ஜெருசலம்: இஸ்ரேல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் நெதன்யாகு, கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார். இஸ்ரேலில்  நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர், தொடர்ந்து 15 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்தாண்டு ஜூனில் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, நப்தாலி பென்னட் கூட்டணி ஆட்சி அமைத்தார். ஆனால், அவருடைய அரசுக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இங்கு கடந்த 1ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 64க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. லிகுட் கட்சி 32 இடங்களிலும், யாயிர் லாபிட்டின் யேஷ் அடிட் கட்சி 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், 11 தொகுதிகளை கைப்பற்றிய ஷாஸ், 7 இடங்களில் வென்றுள்ள ஐக்கிய தோரா ஜுடாயிசம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நெதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட உள்ளது. நெதன்யாகு மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.


Tags : Netanyahu ,Israel , Victory in the parliamentary elections; Netanyahu becomes prime minister of coalition government in Israel
× RELATED இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும்...