ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ.க்களை பாஜ விலை பேசிய வீடியோவை நீதிபதிகளுக்கு அனுப்ப முடிவு: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி

திருமலை: ‘தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜ விலை பேசிய வீடியோவை அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகளுக்கு அனுப்பப்படும்,’என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: எங்கள் கட்சி எம்எல்ஏ.க்களை பாஜ விலைக்கு வாங்க முயன்றது. எம்எல்ஏ.க்களை பேரம் பேச வந்து சிக்கி, தற்போது சிறையில் உள்ள மடாதிபதி ராமச்சந்திரபாரதி, கடந்த மாதம் ஐதராபாத் வந்தார். அவர் பல முயற்சிகள் மேற்கொண்டு எம்எல்ஏ ரோஹித்ரெட்டியை சந்தித்தார்.

இது குறித்து ரோஹித் என்னிடம் கூறினார். ஆதாரத்தை சேகரிக்க திட்டமிட்டு, கேமராக்களை பொருத்தி கண்காணித்தோம். அதன்படி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் நடத்திய ராமச்சந்திரபாரதி உள்ளிட்டோர், மிகவும் மோசமாக பேசியுள்ளனர். அதாவது ‘ஏற்கனவே 8 மாநிலங்களில் ஆட்சியை கலைத்து விட்டோம். தெலங்கானா, ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான்  மாநிலங்கள் தான் எங்களின் அடுத்த இலக்கு. அதையும் விரைவில் கொண்டு வந்து விடுவோம். தமிழ்நாட்டிலும், ெதலங்கானாவிலும் ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கி வருகிறோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார்கள்’ என பேசினர்.

இவர்களை போல் மடாதிபதிகள், பீடாதிபதிகள் போர்வையில் சுற்றி வருபவர்கள் பல அரசுகளை கவிழ்க்க பாடுபடுகிறார்கள். இந்த சதிகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எம்எல்ஏ.க்களை வாங்குவது தொடர்பான வீடியோ அனைத்து நீதிபதிகள், முதல்வர்கள், நீதித்துறை அமைப்புகள், ஊடகங்களுக்கு அனுப்பப்படும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித், நாட்டின் அனைத்து நீதிபதிகளும் நாட்டை காப்பாற்ற கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயகம் கொலை

சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று மோடி பேசுகிறார். இப்படி சொல்வது சரியா? பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. பாஜ.வின் அரசியல் அராஜகத்தை தடுக்காவிட்டால்,  நாட்டிற்கே ஆபத்து,’ என தெரிவித்தார். 93.41% வாக்குப்பதிவு: முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில், 93.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Related Stories: