2022 - 2023 முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கி வர்த்தகம் ரூ92,579 கோடியாக அதிகரிப்பு

* நிகர மதிப்பு ரூ.6,966 கோடி

* இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை: நடப்பு நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் முதல் அரையாண்டில் மொத்த வர்த்தகம் ரூ.92,579 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர், முதன்மை செயல் அதிகாரி காமகோடி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2022-23ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,355 கோடியாகவும் அதில் இதர வருமானம் ரூ.173 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.456 கோடியாகவும், நிகர லாபம் ரூ.276 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 2.69 சதவீதமாகவும், சொத்தின் மீதான வருவாய் 1.72 சதவீதமாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.2,672 கோடியாகவும், இதர வருமானம் ரூ.391 கோடியாகவும் உள்ளது.

மொத்த லாபம் ரூ.904 கோடியாகவும், நிகர லாபம் ரூ.502 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.92,579 கோடியாக உள்ளது. வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ.49,878 கோடியாகவும், கடன்கள் (அட்வான்ஸ்) ரூ.42,701 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த அரையாண்டில் இருந்த மதிப்பான ரூ.6,125 கோடியில் இருந்து ரூ.6,966 கோடியாக உயர்ந்துள்ளது. 727 கிளைகள் மற்றும் 1,693 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களுடன் சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: