பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 100வது நாளாக மெழுகுவர்த்தி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100வது நாளான நேற்று இரவும் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு கிராம மக்கள் மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால்  பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான இடவசதி இல்லாததால், 2வது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 இடங்களை  பரிந்துரை செய்தனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச விமான நிலைய அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக,  13 கிராமங்களில் 5000 விளை நிலங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஏகனாபுரம், அக்கமாபுரம்,  மேளேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவி மங்கலம்  உள்ளிட்ட 13 கிராமங்களில் குடியிருப்பு, நீர்நிலைகளை கைப்பற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள வசதிபோல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி, குடியிருப்பு, நிலங்களை எடுப்பதை தவிர்த்துவிட்டு, வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தினத்தை  முன்னிட்டு, ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையத்துக்கு எதிர்த்து, ஊராட்சி தலைவர் சுமதி சரவணன், பரந்தூர் ஊராட்சி தலைவர் பலராமன் உள்ளிட்ட 13 ஊராட்சி தலைவர்கள்   தலைமையில் ஒரு மனதாக முடிவு எடுத்து தீர்மான புத்தகத்தில்  கையொப்பமிட்டனர்.   ஏற்கனவே 4 கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 100வது நாளான நேற்றிரவு ஏகனாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி  போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: