×

சனாதன தர்மம் குறித்து ஆளுநரிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் மேல்முறையீடு செய்துள்ளார் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி..!!

சென்னை: சனாதன தர்மம் குறித்து ஆளுநரிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மேல்முறையீடு செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கக்கூடிய பொதுநிகழ்ச்சியில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதனை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இதனிடையே சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பதில் அளிக்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்து இருந்தார். சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக ஆளுநர் இருப்பதால் அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என்று குறிப்பிட்டு 19 கேள்விகளை முறையிட்டிருந்தார்.

குறிப்பாக சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன? உருவாக்கியவர் யார்? வேறு எந்த நாட்டிலாவது பின்பற்றப்படுகிறதா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதற்கு பதில் அளித்துள்ள தமிழக ஆளுநர் அலுவலகம், வழக்கறிஞர் துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அது தொடர்பான தகவல்கள் ஆளுநரிடம் செயலகத்தில் இல்லை என்றும்  விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சனாதன தர்மம் குறித்து ஆளுநரிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், ஆளுநர் அலுவலக மேல்முறையீட்டு தகவல் ஆணையரிடம் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

மனுவில், ஆளுநரின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும், சரியான தகவல் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அனுப்பிய பதில் முறையானது அல்ல எனவும், அதை ரத்து செய்துவிட்டு உரிய பதிலை வழங்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் தனது பதிலை 20 நாட்கள் தாமதமாக அளித்துள்ளார். அதற்கு அபராதமாக நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் மொத்தமாக 5,000 ரூபாய் அபராதமாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பில் உயரிய பதவியில் இருந்துகொண்டு உரிய பதில் அளிக்க தயக்கம் காட்டுவதாகவும், சனாதனம் குறித்த தகவல் உண்மை இல்லை என்றால் இதுபோன்ற பேச்சுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பொதுவெளியில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் துரைசாமி குறிப்பிட்டுள்ளார். பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொண்டு மூடநம்பிக்கையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் சமதர்மம் பற்றி பேசாமல், எந்த இலக்கியத்திலும் இல்லாத சனாதன தர்மத்தை பற்றி பேசுவதன் அடிப்படை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : S. Duraisamy ,Governor , Sanatana Dharmam, Governor, Appellant, Senior Advocate Duraisamy
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...