×

சுருட்டப்பள்ளி அணைக்கட்டிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது.  இதுமட்டுமின்றி, ஆந்திர மாநிலத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம், நந்தவனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சின்னாப்பட்டு, காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கட்டுக்கு வருகிறது. இங்கு அணைக்கட்டில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள 914 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியான ஈசா ஏரிக்கு நேற்றிரவு வினாடிக்கு 150  கனஅடி வீதம் தமிழக-ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஊத்துக்கோட்டை ஏரி நிரம்பியதும், அங்கிருந்து பேரண்டூர், பாலவாக்கம் உள்பட 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மழை தொடர்ந்து பெய்வதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதும், அதன் உபரிநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chiruthappalli Dam ,Uruthukkota Lake , Suruttapalli Dam, Uthukottai Lake, Water Opening
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை