×

சென்னையில் பம்பரமாய் சுழலும் மாநகராட்சி பணியாளர்கள்: பட்டாளம் பகுதியில் தேங்கிய மழைநீர் முழுவதும் அகற்றிய மாநகராட்சியின் துரித நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு

சென்னை : சிறு மழைக்கே குளமாகும் பட்டாளம் பகுதியில் துரித நடவடிக்கை எடுத்து எங்கேயும் தண்ணீர் தேங்காத சூழலை உருவாக்கிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மத்திய சென்னை பகுதியில் அமைந்துள்ள பட்டாளம் பகுதியில் கடந்த காலங்களில் சிறு மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக மழை காலம் என்றாலே அந்த பகுதி மக்கள் வீட்டில் முடங்குவர். பட்டாளம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் கடந்த 31 மற்றும் 1-ம் தேதிகளில் பெய்த மழையால் வடிகாலில் குப்பைகள் அடித்து வெள்ளம் தேங்கி இருந்தது. அங்கு கூடுதல் திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றினர். அங்குள்ள காந்தி கால்வாய் வழியாக தண்ணீர் வடிந்து ஓடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று மட்டும் பட்டாளம் பகுதியில் 10செ.மீ. மழை பதிவானது. இருப்பினும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழைக்காலங்களில் அந்த பகுதி மக்கள் படகில் செல்லும் நிலை இருந்தது. ஆனால், தொடர் கனமழையின் போதும் மின்சார விநியோக பாதிப்பு இல்லாமல் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அரசுக்கும் பட்டாள பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  


Tags : Municipal Corporation ,Chennai ,Battalam , Chennai, Bhattalam, rainwater, removed, corporation, people, appreciation
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...