திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்: வேளாண்மை இயக்குநர் திடீர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் வட்டாரங்களில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவ மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டார். மீஞ்சூர் வட்டாரத்தில் சிறுவாக்கம், அனுப்பம்பட்டு, மடிமைகண்டிகை, சின்னகாவனம் ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கியிள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து மழைநீர் வடிய வாய்க்கால்களை தூர்வார அறிவுரை வழங்கினார். குமரன்சேரி கிராமத்தில் நெற்பயிரில் இலைகுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுறுத்தினார்.

சோழவரம் வட்டாரத்தில் புதுப்பாக்கம், பெரிய முல்லைவாயிலில் வாய்கால்கள் தூர்வராமல் உள்ள பகுதிகளை சீர் செய்வதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம பஞ்சாயத்து தலைவர் மூலம் ஏற்பாடு செய்வதற்கு உத்தரவிட்டார். கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், துணை வேளாண்மை விரிவாக்க மையம், கவரப்பேட்டை மற்றும் கிடங்குகளை ஆய்வு செய்து சுத்தமாக பராமரிக்க அறிவுரை வழங்கினார். ரெட்டம்பேட்டில் ஆய்வு செய்து பெரிய கரும்பூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் நெடுநாட்களாக தூர்வாராமல் உள்ளதால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளதால் கால்வாயை தூர்வார அறிவுரை வழங்கினார்.

எல்லாபுரம் வட்டாரத்தில் தண்டலம் கிராமத்தில் உள்ள டி.எஸ்.சேகர் உரக்கடையை ஆய்வு செய்து உர உரிமம் பி.ஓ.எஸ் இயந்திர இருப்பு, பதிவேடுகள் இருப்பு, உண்மை இருப்பு ஆகியவற்றையும், பூச்சி மருந்து உரிமம் மற்றும் அதற்கான ஆவணங்கனையும் ஆய்வு செய்தார். வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வட்டார அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வி.எபிநேஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: