மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் விராட் கோலி!

துபாய்: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதன்முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய நட்சத்திர வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரி அணியான பாகிஸ்தானை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் முனையில் தவித்த நிலையில் விராட் கோலி தனது அசாத்தியமான ஆட்டத்தால் 53 பந்துகளில் 82* ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வித்திட்டு, தான் சேஸ் மாஸ்டர் என மீண்டும் நிரூபித்து காட்டினார்.

இதையடுத்து நெதர்லாந்து அணியுடனான போட்டியில் 62* ரன்களும், வங்கதேச அணியுடனான போட்டியில் 64* ரன்களும் எடுத்து அசத்தினார். இதன் காரணமாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் விராட் கோலியை அடுத்து தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வே அணி வீரரான சிக்கந்தர் ராசா மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: