உலக கோப்பை டி.20 கிரிக்கெட்: குரூப் 2 பிரிவில் அரையிறுதிக்கு முட்டி மோதும் அணிகள்; இந்தியா, தெ.ஆ.வுடன் ரேசில் நீடிக்கும் பாகிஸ்தான், வங்கதேசம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளை மறுநாளுடன் முடிகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நாளை மறுநாள் 3 போட்டிகள் நடக்கிறது. தற்போது இந்த பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா (6 புள்ளி), தென்ஆப்ரிக்கா (5), பாகிஸ்தான், வங்கதேசம் (தலா 4) முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் அரையிறுதிக்குள் நுழையப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று தென்ஆப்ரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியதால் அரையிறுதி ரேசில் நீடிக்கிறது.

பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயுடன் நாளை மறுநாள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு எந்தவித சிக்கலும் இன்றி நுழைந்துவிடும். ஆனால் ஜிம்பாப்வேயிடம் தோற்றால், தகுதி பெற மற்ற அணிகளின் உதவி தேவைப்படும். நெதர்லாந்து தென்ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும் அல்லது வங்கதேசம் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். ஆனால் வங்கதேசம் ரன்ரேட்டில் இந்தியாவை விட முன்னோக்கி இருக்கக்கூடாது. இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் இந்தியா அரையிறுதிக்குள் நுழையும்.

மற்றொரு போட்டியில் தென்ஆப்ரிக்கா, நெதர்லாந்தை வீழ்த்தினால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறலாம். ஆனால் தோற்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு உறுதியாகும். மேலும் பாகிஸ்தான்- வங்கதேச போட்டியில் வெற்றி பெறும் அணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டி மழையால் ரத்தானாலும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் இருக்கும். இதில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்குள் நுழையும்.

பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை வங்கதேசத்தை வீழ்த்தினாலும், இந்தியா அல்லது தென்ஆப்ரிக்கா அணிகளில் ஏதேனும் ஒரு அணி கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் தான் அரையிறுதி வாய்ப்பை பெற முடியும். இதே நிலைதான் வங்கதேசத்திற்கும். கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினாலும், இந்தியா அல்லது தென்ஆப்ரிக்கா தோற்றால் தான் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை ஜிம்பாப்வேயிடம் கடைசி போட்டியில் இந்தியா தோற்று, பாகிஸ்தான் வென்றால் ரன்ரேட்டில் இந்தியாவை விட சிறப்பாக உள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையும்.

இதேபோல் தென்ஆப்ரிக்கா தோற்று பாகிஸ்தான் வென்றால் அந்த அணி சிக்கலின்றி அரையிறுதிக்குள் தகுதிபெறும். ஒருவேளை வங்கதேசம், பாகிஸ்தானை வென்றாலும் ரன்ரேட் பின்தங்கி இருப்பதால் இந்தியாவுக்கு அனுகூலமாக அமையும். மொத்தத்தில் நாளை மறுநாள் சூப்பர் சன்டே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக 3 போட்டிகளும் அமையப்போவது உறுதி.

புள்ளி பட்டியல்

சூப்பர் 12 சுற்று குரூப் 2

அணி                            போ  வெ   தோ  ரத்து   புள்ளி  ரன்ரேட்

இந்தியா        4          3        1      0           6        0.730   

தென்ஆப்ரிக்கா    4         2        1       1          5    1.441   

பாகிஸ்தான்      4         2        2       0            4        1.117   

வங்கதேசம்     4         2        2       0         4        -1.276   

ஜிம்பாப்வே     4         1        2       1          3        -0.313   

நெதர்லாந்து      4         1        3       0           2        -1.233

Related Stories: