×

அரும்பாக்கத்தில் இன்று ராட்சத மரம் விழுந்து 6 வாகனங்கள் சேதம்

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் இன்று அதிகாலை 100 ஆண்டு பழமையான ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் 2 கார்கள், 4 பைக்குகள் பலத்த சேதமடைந்தன. அந்த மரத்தை அரவை இயந்திரம் மூலமாக தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். சென்னை நகரில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கம், பாரி தெருவில் இருந்த 100 ஆண்டு பழமைவாய்ந்த புங்கமரம் இன்று அதிகாலை 3 மணியளவில் வேரோடு முறிந்து, அங்குள்ள வீட்டின் மதில்சுவரின்மீது விழுந்தது. இதில், அந்த வீட்டின் அருகே நின்றிருந்த பல லட்சம் மதிப்பிலான 2 சொகுசு கார்கள் மற்றும் 4 பைக்குகள் நொறுங்கி, முற்றிலும் சேதமாகிவிட்டன.

அங்குள்ள வீட்டின் முன்பும் மரக்கிளைகள் முறிந்து கிடந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ராட்சத அறுவை இயந்திரத்தின் மூலம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, வீட்டின் முன்பு விழுந்து கிடந்த ராட்சத மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். மேலும், மரத்தின் அடியில் சிக்கியிருந்த கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பத்திரமாக அகற்றினர்.

எனினும், அதிகாலை நேரத்தில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழைநீர், மரங்கள் விழுந்து கிடந்தால், அவற்றை அகற்றுவதற்கு தீயணைப்பு துறை 24 மணி நேரமும் தயார்நிலையில் உள்ளது என அதிகாரி தெரிவித்தார்.

Tags : arumbakkam , Arumbakkam, giant tree, 6 vehicles damaged`
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு