×

பழங்குடியின பெண் விரட்டியடிக்கப்பட்ட விவகாரம் வனபாதுகாவலர் உட்பட 5 பேர் பணியிட மாற்றம்-கேரள வனத்துறை தகவல்

சிவகிரி : தமிழக வன எல்லை பகுதியில் பழங்குடியின பெண் விரட்டியடிக்கப்பட்ட விவகாரத்தில் வன பாதுகாவலர் உட்பட 5 பேர் பணியிட மாற்றம் செய்து கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தலையணை வனப்பகுதியில் 43 பளியர் பழங்குடியினர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன் எடுத்தல், குங்குலியம், சுண்டைக்காய், கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி இப்பகுதியில் வசித்து வரும் ஈசன் மனைவி சரசு மற்றும் ராஜா ஆகிய இருவர் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கேரளா - தமிழ்நாடு வனச்சரக எல்லைப்பகுதியில் வன மகசூல் சேகரித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கேரள வனத்துறையினர் இப்பகுதிக்கு யாருமே வரக்கூடாது எனக்கூறி சரசு தோளில் வைத்திருந்த வன மகசூலை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்.இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கேரள மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள வனத்துறை சார்ந்த பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ் மற்றும் தலையணை பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், புளியங்குடி பாண்டியன் ராமராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய கேரள வன பாதுகாவலர் பாகுலேயன் மற்றும் நான்கு பேரிடம் நவ.2ம் தேதிக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், பெரியார் கோட்ட கூடுதல் வனச்சரகர் ஆசிக், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட வன பாதுகாவலர் உட்பட 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பெரியார் கோட்ட கூடுதல் வனச்சரகர் ஆசிக் தெரிவித்தார்.

 மேலும், தலையணை பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை தமிழக வன எல்லைக்குள் புகுந்து சோதனை செய்வது, மரியாதை குறைவாக நடத்துவது போன்று பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டோம். தமிழக எல்லையைத் தாண்டி கேரள எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கேரள வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையேற்று பழங்குடியின பெண் சரசு, ராஜா ஆகியோர் புகார் மனுவை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்தனர்.

Tags : Kerala Forest Department , Sivagiri: 5 people, including a forest conservator, have been transferred in the case of tribal women being chased away in the Tamil Nadu forest border area.
× RELATED கேரள வனத்துறை அலட்சியத்தால் 2...