×

அபாயங்களை எதிர்கொண்டு பாலத்திற்கு அடியில் 25 அடி பள்ளத்தில் இறங்கி குடிநீர் எடுக்கும் கிராம மக்கள்-மேட்டூரிலிருந்து முறையாக வழங்க எதிர்பார்ப்பு

சேலம் : சேலத்தை அடுத்த கே.ஆர்.தோப்பூர் அருகே அபாயங்களை எதிர்கொண்டு பாலத்திற்கு அடியில் குடிநீர் பிடித்து வருவதாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நீர் வார்க்கும் மேட்டூர் அணை சேலத்தில் இருக்கிறது. ஆனால் இந்த அணையால் இந்த மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்ற மனக்குமுறல் நீண்டநாட்களாக இருந்து வருகிறது. இதேபோல் சேலம் மாநகர பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  மேட்டூர் அணையில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தநீர் வழித்தடங்களில் இருக்கும் கிராம மக்கள், பெரும்பாலும் உப்புநீரையே பயன்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, மேட்டூர் வழித்தடத்தில் இருக்கும் கே.ஆர்.தோப்பூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள், குடிநீருக்காக பல ஆண்டுகளாக தவித்து வருவதாகவும், இதனால் பெரும் அபாயங்களை எதிர்கொண்டு சரபங்கா ஆற்றுப்பாலத்திற்கு அடியில் இறங்கி நீர் பிடித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து கே.ஆர்.தோப்பூர் சுற்றுப்புற கிராம மக்கள் கூறியதாவது:

சேலம்-தாரமங்கலம் பிரதான சாலையில் இருக்கும் கே.ஆர்.தோப்பூரை சுற்றிலும் கிருஷ்ணம்புதூர், அணைமேடு, லட்சுமாயூர், கோட்டமேடு, நரசுக்காடு, காடைகாரனூர், பச்சக்காடுவயல், சோலைவளவு, எருமைக்காரன்வளவு, சித்தனூர் என்று பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 5ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், நெசவு, கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். மேட்டூர் நீர்வழித்தடத்தில் இருந்தாலும் குடிநீர் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அந்தந்த கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் உப்புநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் பத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் 5 கிலோ மீட்டருக்கு மேல், வாகனங்களில் பயணித்து சரபங்கா ஆற்றுப்பாலத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து 25 அடி தூரம் கீழே இறங்கி பாலத்திற்கு அடியில் ஓடும் நீரை குடிப்பதற்காக பிடித்துச் செல்கின்றனர். இதேபோல் இந்தவழியாக செல்லும் மேட்டூர் குடிநீர் திட்டத்தின் பைப்பில் இருந்து பீறிட்டு அடிக்கும் நீரையும் குடிப்பதற்கு பிடித்துச் செல்கின்றனர்.

மழைகாலங்களில் பாலத்திற்கு அடியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் விஷ ஜந்துக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பெரும் அபாயங்களை எதிர்கொண்டு, குடிப்பதற்கு தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே சிரமங்களை தவிர்க்க, 10 கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பாதுகாப்பான இடத்தில் மேட்டூர் குடிநீர் இணைப்பு கொடுத்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் மேட்டூர் காவிரிநீரை ஏற்றி விநியோகிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

 இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கே.ஆர்.தோப்பூர் சுற்றுப்புற பகுதிகளுக்கு மேட்டூர் காவிரி குடிநீர் விநியோகிப்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Tags : Mettur , Salem: Near KR Dhoppur next to Salem, more than ten people are holding drinking water under the bridge facing dangers.
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது