×

கரூர் மாவட்டத்தில் அரசு திட்டப்பணி சிறப்பாக நடக்கிறது-சட்டபேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவர் பெருமிதம்

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்கு குழுத் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் சீனிவாசன், குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன் (வேடசந்து£ர்), பூண்டி கலைவாணன் (திருவாரூர்), வேல்முருகன் (பண்ருட்டி), மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் தணிக்கை பத்திகள் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தொல்லியல்துறை, எரிசக்தி துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் விளக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்கு குழுத் தலைவர் பேசியதாவது:

பொதுமக்கள் வரியாக செலுத்தும் தொகையில் நடைபெறும் பொதுமக்களுக்கான வளர்ச்சித் திட்ட பணிகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான திட்ட செயலாக்க நடைமுறைகளில் அரசு தெரிவித்துள்ள வழி முறைகளை பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டு, மக்களின் வரிப்பணம் முறையாக செலவிப்படுவதை உறுதி செய்வது கணக்கு குழுவின் பணியாகும். எனவே, அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், திட்ட பணிகளை அரசு வரைமுறைகளின்படி முழுமையாக குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். கரூர் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் விரைவாகவும், செம்மையாகவும், நடைபெறுகிறது என்றார்.

முன்னதாக, கரூர் பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பதையும், இந்த பகுதியில் உள்ள அமராவதி ஆற்று தடுப்பணையில் தண்ணீர் சேகரித்து நீரின் மாசு குறித்து பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டு, நீரின் மாசு குறைவாக உள்ளதை உறுதி செய்தனர். மேலும், வேலாயுதம்பாளையம் புகழி மலையில் தொல்லியல்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 1, 2 மற்றும் 3ம் நூற்றாண்டு சமணர் படுக்கை மற்றும் கல்வெட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சிறப்பாக பராமரித்து வருங்கால சமூதாயத்திற்கு கடந்த கால வரலாற்றினை தெரியபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

தொடர்ந்து, தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்லூரி பெண்கள் விடுதியை ஆய்வு மேற்கொண்டு, கழிவறை, படுக்கை மற்றும் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு, மாணவிகளிடம், விடுதிகளின் செயல்பாடுகள், உணவின் தரம் போன்றவை குறித்தும் கேட்டறிந்தனர். விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிவர்த்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுத் திட்டங்கள் சாராத செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களான நிமிர்ந்து நில் துணிந்து செல், இளந்தளிர் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு, தங்க தந்தை திட்டம், விடியல் வீடு, பாலம், கலங்கரை விளக்கம், பொக்கிஷம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கிணை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்கு குழுத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

அவர்களிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் எடுத்துரைத்தார். இதில், தமிழநாடு சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), மாநகராட்சி துணை மேயர் சரவணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,Legislature Public Accounts Committee ,Perumitham , Karur: Chairman of the Public Accounts Committee of the Tamil Nadu Legislative Assembly Selvaperunthakai chaired the meeting of the Karur District Collector's office.
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்