×

விவசாயிகளின் மகிழ்ச்சி தொடர்கிறது வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு-கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

ஆண்டிபட்டி : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீர், வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது.

இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆண்டிபட்டி அருகே கடந்த 1959ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாகும். இதில் 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம். வருசநாடு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை வெள்ளம், மூலவைகை ஆற்றின் வழியாக அணைக்கு வந்து சேரும்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் கொட்டக்குடி ஆற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை வெள்ளம் அணைக்கு வந்து சேரும். வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்தில் முதல் போகத்திற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக். மாதம் இரண்டாம் போகத்திற்கும் அணையில் தண்ணீர் திறக்கப்படும். மேலும் தண்ணீர் தேவைக்காக ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு 58ம் கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும்.

வைகை அணை உதவியுடன் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியார் பாசனத்தின் கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசனப்பகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசனப் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியாகவும் உள்ளது.

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் அதிகப்படியாக தண்ணிர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அணையின் நீர்மட்டமும் கடந்த ஆக. 1ம் தேதி முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1,190 கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.

அதன்பிறகு அணையில் இருந்து கடந்த ஆக. 8ம் தேதி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக 6 நாட்களுக்கு 1,140 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு ஆக. 27ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து மூன்று கட்டமாக 1,377 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பின்னர் செப். 7ம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு அணையில் இருந்து 120 நாளைக்கு 8,461 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. செப். 9ம் தேதி வைகை அணை 58ம் கிராம கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறையத்தொடங்கியது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறையத் தொடங்கியது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், நீர்மட்டமும் குறையத் தொடங்கியது. இதனால் அக். 8ம் தேதி 58ம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதையடுத்து கடந்த அக். 18ம் தேதி அணையின் நீர்மட்டம் மீண்டும் 69 அடியாக உயர்ந்து. அணையில் இருந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. அப்போது அணையின் நிர்மட்டத்தை 69 அடியில் இருந்து 70 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே வந்ததால், அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர் திறந்து விடப்படலாம். எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அன்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது. பின்னர் அதிகாலையில் மழை குறைந்ததும் சீரான அளவு தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69.49 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்தும் முன்பை விட உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி அணைக்கு நீர்வரத்து 732 கனஅடியாக இருந்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 2,308 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் 70 அடிக்கும் மேல் உயர வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே தேனி, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.

32வது முறை நிறைந்தது

வைகை அணை கட்டப்பட்டது முதல் இன்று வரை வைகை அணை 32 முறை அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 1960ம் ஆண்டு அணை முதன் முறையாக நிரம்பியது. அதன்பிறகு இந்த ஆண்டில் இரண்டு முறையுடன் சேர்த்து, மொத்தம் 32 முறை நிரம்பியுள்ளது.

இந்த ஆண்டில் 2வது முறை

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஆக. 1ம் தேதி அதன் முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்ததாலும், இந்த ஆண்டில் 2வது முறையாக அக். 18ம் தேதி மீண்டும் அதன் முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது.

14 ஆண்டுகளுக்கு பின் 71 அடி

வைகை அணை நீர்மட்டத்தை 71 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். இதனால் கடந்த அக். 22ம் தேதி அணையின் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்தது. இந்த 71 அடிக்கு தண்ணீர் கடந்த 2008ம் ஆண்டு தேக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டில் மீண்டும் 71 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டது. வைகை அணையில் 71 அடி தேக்கப்பட்டதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பரவலாக மழை பெய்தது

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. இதில் வைகை அணைக்கான நீர்வரத்து பகுதிகளான கூடலூர் பகுதியில் 1.8 மி.மீ, உத்தமபாளையம் 6.2 மி.மீ, வீரபாண்டி 25.2 மி.மீ, வைகை அணை 48.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags : Vaigai Dam , Antipatti: With the onset of northeast monsoon, rain has started in the catchment areas of Vaigai Dam. Thus the
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு