×

பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி: ஐகோர்ட் மதுரைக் கிளை அதிரடி

மதுரை: பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் காளியம்மன் கோயிலுக்குள் சென்று பட்டியல் இன மக்கள் வழிபட ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் சித்தரேவு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், பல்வேறு சமூகத்தினை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து இங்கு வசித்து வருகிறோம், இதில் பட்டியலினத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

இந்நிலையில் இங்குள்ள செல்வ விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலில் பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்த, உயர் சாதியை சேர்ந்த சிலர் 10 வருடங்களுக்கு மேலாக எங்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர், இது தீண்டாமையை கடைபிடிக்கும் செயலாகும்.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் அனைத்து மத வழிபாடுகளும் செய்வதற்கு அனுமதி உள்ளது, ஆனால் அதை மறுத்து சிலர் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் தீண்டாமை செயலை கடைபிடிக்கக்கூடிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் செல்வ விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

அதேபோல் சாதிய பாகுபாடு நடத்திய 3 நபர்களும் எழுத்துபூர்வமான பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Chittarevu ,Palani ,ICourt Madurai branch , Scheduled caste people allowed to visit temple in Chittarevu village near Palani: ICourt Madurai branch takes action
× RELATED தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு