×

கருவேலமரங்கள், நாணல் ஆக்கிரமிப்பு வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும்-மானாமதுரை மக்கள் கோரிக்கை

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றில் நீரை உறிஞ்சி அசுரத்தனமாக வளர்ந்து வரும் கருவேலமரங்கள், நாணல்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரையில் வைகை ஆறு 360 மீட்டர் அகலத்தில் பரந்து விரிந்து செல்கிறது. ஆற்றில் கடந்த 2018ம் ஆண்டு அசுரத்தனமாக வளர்ந்த கருவேலமரங்களால் தண்ணீர் பல இடங்களில் தடைபட்டது. இதனால் கரைகளை ஒட்டிய பல பகுதிகளில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதுடன் கரைகளும் சேதமடைந்தது. மேலும் ஆற்றில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர்பாட்டில்கள், குப்பைகள் கருவேலமர புதர்களில் சிக்கின. இதனால் ஆற்றின் அழகு கெட்டுப்போய் வாய்க்கால் புறம்போக்கு போல காட்சியளித்தது. எனவே ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அப்போதைய கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின்பேரில் அரசு செலவில் வாங்கப்பட்ட ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்கள் அகற்றும் பணி கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. ஒரு மாத காலம் நடந்த இப்பணியில் மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியும் ஆற்றை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் வெட்டப்பட்ட கருவேலமரங்கள் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக மீண்டும் வளர்ந்து வருவதால் ஆற்றில் வரும் தண்ணீர் பெருமளவு வீணாகிறது.

பழையபடி ஆற்றில் அடித்து வரும் குப்பைகள் மீண்டும் கருவேல மரங்களில் சிக்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. பல்வேறு கழிவுகள் பள்ளங்களில் தேங்குவதால் ஆற்றின் கீழே படிந்துள்ள நல்லதண்ணீரில் கழிவுகள் சேகரமாகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே ஆற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்கள், நாணல்களை அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெரியசாமி கூறுகையில், மானாமதுரை வைகை ஆற்றில் தற்போது மூன்றாவது முறையாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் ஆற்றுப்பாசனம் மூலம் கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. மானாமதுரை நகர் குடிநீருக்கு பஞ்சம் இன்றி இருக்கும் நிலையில் ஆற்றில் வளர்ந்து வரும் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் குறையும்.

கருவேல மரங்களில் குப்பைகள், சேறுகள், கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கும். கருவேலமரங்களால் சமூக விரோத செயல்களும் நடக்கும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால் சிறு மரங்களாக இருக்கும்போதே அவற்றை அகற்றி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக விவசாயம் உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags : Vaigai river , Manamadurai: Oak trees and reeds, which are growing monstrously by absorbing water in Manamadurai Vaigai river, should be removed.
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு