×

சிதம்பரம் கடைமடை பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீரால் 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது-விவசாயிகள் வேதனை

சிதம்பரம் : சிதம்பரம் கடைமடை பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர் மற்றும் தற்போது பெய்யும் மழைநீரால் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள், நாற்றாங்கால் அழுகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சிதம்பரம் அருகே காவிரி டெல்டா பகுதியின் கடைமடை பகுதியாக உள்ள தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், உத்தமசோழமங்கலம், கீழச்சாவடி, கிள்ளை, நஞ்சமகத்துவாழ்க்கை, கீழதிருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, பிச்சாவரம், கணகரபட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உட்பட்ட வயல்களில் தற்போது சம்பா நடவு பணியும் நடவுக்காக நாற்றங்கால் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கடலில் வடியாமல் எதிர்த்து பிச்சாவரம் சதுப்புநில காடுகள் வழியாக வந்ததால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் வயல்களில் நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மழைநீரும், கொள்ளிடம் தண்ணீரும் ஒன்றாக வயலில் தேங்கி நிற்கிறது. இதனால் நடவு செய்வதற்காக விடப்பட்ட நாற்றங்கால் முழுவதுமாக அழுகிவிட்டது. மேலும் நடவு நட்டு 20 நாட்கள் ஆன நெற்பயிர்களும் மூழ்கி வீணாகியுள்ளது. எனவே தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கான்சாகிப் பாசன வாய்க்கால் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் சென்ற தண்ணீர் மற்றும் சிதம்பரம் பகுதியில் பெய்யும் மழைநீர் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு மற்றும் நாற்றங்காலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டது.

நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டதால் தற்போது நடவு பணிக்கு நாற்று இல்லை. இதுகுறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர், வட்டாட்சியர், வேளாண் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு நேரடியாக சென்று மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதனை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் நவரை பருவத்திற்காவது விவசாயிகள் நல்ல முறையில் மகசூல் பெற அரசு தேவையான விதை நெல், உரம், ஜிப்சம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என கூறினார்.

Tags : Chidambaram Kadimada , Chidambaram: 2 thousand 500 acres of paddy crops and saplings have been destroyed by the flood water of the Kollid River and current rainwater in the Chidambaram catchment area.
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...