அமெரிக்காவில் வரும் 8ம் தேதி இடைக்கால தேர்தல்: அனைத்து மாகாணங்களிலும் அதிபர் ஜோ பைடன் சூறாவளி பரப்புரை

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற உள்ள இடைக்கால தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தனது பரப்புரையை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவில் யார் அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும் அவரது 4 ஆண்டு பதவி காலம் மத்தியில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். அதிபர் பதவி ஏற்ற 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேர்தல் இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராகி 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் வரும் 8-ம் தேதி அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் அதிபர் ஜோ பைடன் சூறாவளி பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

நியூமெக்சிகோ மாகாணத்தில் பேசிய பைடன் மிக குறைந்த காலத்தில் தமது அரசு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இருப்பதாக குறிப்பிட்டார். நியூ மெக்சிகோவை அடுத்து கலிபோர்னியா, இலினொய்ஸ், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களிலும் அதிபர் ஜோ பைடன் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 8-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதி சபைகளில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் பெறும் வெற்றி 2024-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறுள்ள அதிபர் தேர்தலில் எந்த கட்சி வாகை சூடும் என்பதற்கு அச்சாரமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.    

Related Stories: