×

வளர்ப்பு நாய்களை அனுமதியின்றி அழைத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: முன்பதிவின்றி வளர்ப்பு நாய்களை ரயிலில் அழைத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

இதுகுறித்தான விதிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது; ரயில்களில் உரிய அனுமதியுடன் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லலாம். முன்பதிவின்றி கொண்டு சென்றால் 6 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும்போது வளர்ப்பு நாய்களை கூடவே எடுத்துச் செல்லலாம்.

இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அருகில் உள்ள பயணி ஆட்சேபித்தால், வளர்ப்பு நாய், ரயில் மேலாளர் பெட்டியில் உள்ள கூண்டுக்கு மாற்றப்படும். கூடுதல் கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது. மற்ற குளிர்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு படுக்கை / இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகளில் வளர்ப்பு நாய்களை கூடவே எடுத்து செல்லமுடியாது.

ஆனால் சிறிய நாய்க்குட்டிகளை கூடையில் வைத்து அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பதிவுசெய்து எடுத்து செல்லலாம். குளிர்சாதன முதல்வகுப்பு பயணச்சீட்டு பயணிகளை தவிர மற்ற பயணிகள் வளர்ப்பு நாய்களை ரயில் மேலாளர் பெட்டியில் உள்ள நாய் கூண்டு மூலமாக கொண்டு செல்லமுடியும். பயணத்தில் நாய்க்கு தேவையான உணவு, தண்ணீர் போன்ற தேவைகளை பயணிகளே கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பயணச்சீட்டுக்கு ஒரு நாய் மட்டுமே பதிவு செய்ய முடியும். பதிவு செய்ய ரயில் புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வரவேண்டும். வளர்ப்பு நாயை ரயிலில் கொண்டு செல்ல, அந்த நாய்க்கு எவ்விதமான தொற்று வியாதியும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் 24 மணிநேரம் முதல் 48 மணிநேரத்திற்கு முன்பாக உடல்நல சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்யாமல் நாய்களை ரயிலில் கொண்டு சென்றால் ஆறு மடங்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.  இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Southern Railway , 6x fine for carrying pet dogs without permission: Southern Railway notification
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...