டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்க பாரதிய ஜனதா கட்சி ரூ.100 கோடி பேரம்?: வீடியோ ஆதாரங்களை சந்திரசேகர ராவ் வெளியிட்டதால் பரபரப்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாரதிய ஜனதா கட்சி பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்கள் 4 பேரை 100 கோடி ரூபாய்க்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டுகளை அம்மாநில பாரதிய ஜனதா கட்சி மறுத்து இருந்தாலும் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அழைத்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மூவரை கைது செய்ய வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தெலுங்கானா உயர்நீதிமன்றம் மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமச்சந்திர பாரதி, சதீஸ் சர்மா, நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களின் மத்தியில் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட சந்திரசேகர ராவ் டெல்லியை சேர்ந்த இடை தரகர்கள் தெலுங்கானாவில் சுயமரியாதையை சீண்டி பார்ப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

மடாதிபதிகள், பீடாதிபதிகள் என்ற போர்வையில் சிலர் அரசுகளை கவிழ்க்கும் சதிக்கு துணைபோவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை நீதிமன்றங்கள் விசாரணை அமைப்புகளிடம் வழங்க போவதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார். டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களை பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அம்மாநில பாரதிய ஜனதா கட்சி மறுத்து வருகிறது. யாதாத்ரியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் சத்தியம் செய்து குற்றச்சாட்டை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.          

Related Stories: