ரொக்கப் பணத்தின் தேவையை குறைக்கும் டிஜிட்டல் யுகம்: தீபாவளி கால வணிகத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரொக்க பணப்புழக்கம் சரிவு

சென்னை : டிஜிட்டல் யுகத்தில் இனி ரொக்கப்பணத்திற்கு தேவை இருக்காது என்பதை இந்தாண்டு தீபாவளி கால பண பரிவர்த்தனைகள் வெளிச்சமிட்டு காட்டியுள்ளன. டிஜிட்டல் வல்லெட்கள்  வந்துவிட்ட இந்த காலத்தில் லெதர் வல்லெட்களுக்கு வேலை இல்லை என்பதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், ஸ்மார்ட் போன் இல்லாத கைகளை பார்க்க முடியாத இந்த  டிஜிட்டல் யுகம் பணத்தையே இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறது. UPI QR code டிஜிட்டல் வல்லெட்டுகள் மூலமாக பணம் செலுத்துவது ஜெட் வேகத்தில் பெருகி வருவதால் நாட்டில் ரொக்க பணத்திற்கான தேவை சுருங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ரொக்க பண புழக்கம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து இருப்பதாக SBI வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரிவர்த்தனைக்கான முதன்மை  தேவையாக பணம் இனி இருக்க போவது இல்லை. டிஜிட்டல் முறைகள் இருக்க போகின்றன என்பதையே இந்த ஆய்வறிக்கை உணர்த்துகிறது. 2015-2016 நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரொக்க பணத்தின் அளவு 88% இருந்த நிலையில், 2021-2022 நிதியாண்டில் அது 20% குறைந்துள்ளது.

இது 2026-2027 நிதியாண்டில் 11.15% சுருங்கிவிடும் என SBI ஆய்வறிக்கை கணித்துள்ளது. அதே வேளையில் 2015-2016-ல் 11.26% மட்டுமே இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2021-2022 நிதியாண்டில் 80.04% அதிகரித்துள்ளது. இது 2026-2027 இன்னும் உயர்ந்து 88% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.   குறிப்பாக, UPI தளம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எகிறி வருகின்றன. கடந்த நிதியாண்டில் UPI பரிவர்த்தனை மதிப்பு 84 லட்சம் கோடியை எட்டி இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலேயே 30 லட்சம் கோடி ரூபாயை சர்வசாதாரணமாக கடந்துள்ளது.

பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் UPI வாயிலாக 12.11 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடலின் ஒரு அங்கம் போலவே மாறி போன ஸ்மார்ட் போன்கள் எந்நேரமும் கைகளுக்குள்ளே இருக்கும் போது ரொக்கமாக பணத்தை சுமக்க வேண்டிய மனநிலையில் இருந்து மக்கள் விடுபட தொடங்கிவிட்டனர் என்பதையே இவை உணர்த்துகின்றன. விரைவில் சில்லறை வணிகத்திற்காக டிஜிட்டல் கரன்சியையும் ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதால் வரும் காலத்தில் ரொக்கம் மறைந்து முற்றிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.  

Related Stories: