×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு: பேரணியில் பயங்கரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பேரணியின் போது மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,  தெஹ்ரிக்- இ- இன்சாப்  கட்சி (பிடிஐ) தலைவருமான இம்ரான்கான்,  கடந்த 2018ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார்.  பொருளாதார பிரச்னைகளை சரியாக கையாளவில்லை என்று கூறி அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  342 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவில் இம்ரான் கான் பதவிக்கு வந்ததாக கருதப்பட்டவர். ஆனால், அதே ராணுவத்தின் ஆதரவை அவர் இழந்ததாக அரசியல் பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.  பதவி விலகிய பின்னர் அவர் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால், ராணுவத்தின் அதிருப்திக்கு உள்ளாகினார்.

இம்ரான்  பதவியில் இருந்தபோது, வெளிநாட்டு தலைவர்கள் அளித்த  விலை உயர்ந்த பரிசு பொருட்களை கருவூலத்துக்கு அனுப்பாமல் விற்று பணமாக்கி எடுத்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.  எனவே, அவரை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு  அரசு  கோரிக்கை விடுத்தது. இதை விசாரித்த,  தேர்தல் ஆணையம் பரிசு பொருட்களை விற்றதில் இருந்து கிடைத்த வருவாயை மறைத்த குற்றத்திற்காக அவருடைய எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்தது. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராகவும், விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வலியுறுத்தியும் இம்ரான் தொடர்ந்து போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பஞ்சாப் மாகாணம், வசீராபாத்தில் இம்ரான் தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டபோது அவர் நின்றிருந்த கன்டெய்னர் லாரியை நோக்கியை மர்ம நபர் சரமாரியாக  துப்பாக்கிசூடு நடத்தினார். இதில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். பிடிஐ கட்சியின் மூத்த தலைவர்களான பைசல் ஜாவேத் எம்பி, அகமது சத்தா உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். இம்ரான் கான்  உடனடியாக லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இம்ரான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Pakistan ,Imran Khan , Ex-Prime Minister of Pakistan Imran Khan shot: terror at the rally
× RELATED நாட்டின் நலனுக்காக யாருடனும்...