அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி ஐகோர்ட்டில் வழக்கு: அரசு பதில்தர நீதிபதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.செல்வராஜ் உள்ளிட்ட 5 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்தோம். ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. எனவே, காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு கலைக்கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை  வரும் 25ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: