வட கிழக்கு பருவமழை தீவிரம்: 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னையில் விடியவிடிய கொட்டியது

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 21 மாவட்டங்களில்  இன்று மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடக்கம் முதலே, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து  வருகிறது. அதன் தொடர்ச்சியாக  வடஇலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியில்  உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து   வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் தரைப் பகுதிக்குள் நுழைந்தது.

அதனால், கடந்த இரண்டு நாட்களாக வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அதிகபட்சமாக 200 மிமீ மழை கிடைக்கும் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  வட சென்னையில் 300 மிமீ மழை பெய்தது. இது நவம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி திரும்பி கடலூர், டெல்டா மாவட்டங்களை ஒட்டிய தமிழக பகுதிக்குள் வந்தது. அதனால் நேற்று முன்தினம் இரவு  முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

மேலும்,  சீர்காழியில் 220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் 200 மிமீ, கொள்ளிடம் 170மிமீ, சிதம்பரம் 150மிமீ, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை 120மிமீ, ராமநாதபுரம், சிவகங்கை 100 மிமீ, என பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும்  புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென் காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 6ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கி ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கும்.

Related Stories: