×

மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா மு.க.ஸ்டாலின், மம்தா, ரஜினி வாழ்த்து

சென்னை: மேற்குவங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் கோபாலன் 80வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மணிப்பூர் ஆளுநரும், மேற்குவங்க ஆளுநராக (பொறுப்பு) தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இருந்து வருகிறார். இவரது அண்ணன் இல.கோபாலனின் 80வது பிறந்தநாள் (சதாபிஷேக விழா) சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அவருக்கும், அவரது மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். விழாவுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் இல.கணேசன் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

இதுபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகர் ரஜினிகாந்த், டி.ஆர்.பாலு எம்.பி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஜெ.கருணாநிதி எம்எல்ஏ, பாஜ மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் கவர்னர் சண்முகநாதன், பாஜ மாவட்ட தலைவர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், டால்பின் தர் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் பயணமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னை வந்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு இருவரும் பேட்டி அளித்தபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டு சென்றார். நிகழ்ச்சியின் போது ஆளுநர் எல்.கணேசன் அளித்த பேட்டியில், ‘‘எனது சகோதரரின் 80வது சதாபிஷேகம் விழா, திருமணம் போல் நடந்துள்ளது. நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் அவரும் வந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. மணிப்பூர் முதல்வருக்கு முக்கிய பணி இருப்பதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அது மிக முக்கிய பணி என்பதால் நான் புரிந்துகொள்கிறேன். ஆளுநர் பணி எனக்கு நிச்சயமாக திருப்தி தருகிறது. எனக்கு திருப்திகரமாக இருக்கிறதா என்ற கேள்வியை விட எனது மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம்” என்றார்.


Tags : M. K. Stalin ,Mamata ,Rajini ,West Bengal ,Governor ,L. Ganesan , M.K. Stalin, Mamata, Rajini greet West Bengal Governor L. Ganesan's house ceremony
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!