×

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு மேஜை, இருக்கை, அலமாரிகள் வாங்க 8.38 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும்  மாணவர்களுக்கு மேஜை, இருக்கை, அலமாரிகள் வாங்க ₹8.38 கோடி அரசு ஒதுக்கீடு  செய்துள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:  2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

“ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணாக்கர் வசதியாக கல்வி பயிலும் வகையில் 99 நடுநிலை பள்ளிகள், 108 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலை பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு தேவையான இரும்பு அலமாரி ஆகிய அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ₹7.46 கோடி செலவில் வழங்கப்படும்” என்று கூறி இருந்தார்.

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் பொருட்டு, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதன் மூலம் கல்வி கற்பதற்கான சிறந்த ஒரு சூழலை உருவாக்க முடியும் என்பதன் அடிப்படையில் 99 நடுநிலை, 108 உயர்நிலை மற்றும் 98 மேல்நிலை பள்ளிகள் உள்பட 305 பள்ளிகளுக்கு தேவையான மேஜையுடன் கூடிய இருக்கை மற்றும்  இரும்பு அலமாரிகள் டான்சி மூலம் வாங்கி வழங்கிடவும், இதன் பொருட்டு செலவினமாக  ₹8,37,91,008 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Adi Dravidar Welfare Department ,Tamil Nadu Government , 8.38 crore allocation for purchase of tables, seats, cupboards for the students of Adi Dravidar Welfare Department: Tamil Nadu Govt.
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...