×

கோவையில் கார் வெடித்து உயிரிழந்த முபின் வீட்டில் ஐஎஸ் அமைப்பின் கொடி- ஆவணங்கள் சிக்கியது

கோவை: கோவையில் கார் வெடித்து உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய ஆவணங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சின்னம், கொடி ஆகியவை இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 27ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ அதிகாரிகள் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோயில் வரையிலான 350 மீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, வீடுகள், வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முபின் செல்போனில் இருந்து யாருடன் பேசியுள்ளார்? என்பதை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முபின் மற்றும் கைதான 6 பேரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு யார் பண உதவி செய்துள்ளனர்? எங்கிருந்து பணம் வந்துள்ளது? என்ற விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் கடந்த 23ம் தேதி போலீசார் நடத்திய சோதனையின்போது  சில காகித குறிப்புகளையும் ‘சிலேட்’ ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. போலீசார் கைப்பற்றிய சிலேட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி மற்றும் சின்னம் ஆகியவை  வரையப்பட்டிருந்தது. இதில், வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த சிலேட்டில் அரபு மொழியில் வாசகங்கள் சில இருந்தது. மேலும், வீட்டில் கைப்பற்றிய காகித குறிப்பு ஒன்றில் சில குறிப்புகள் இருந்தன. இதனை முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில்தான் கோவை போலீசார் கார் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் தமிழக டிஜிபியிடம் தகவல் அளித்து உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்துள்ளனர். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேசா முபினுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர், வழக்கு என்ஐஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


Tags : IS ,Mubin ,Coimbatore , IS flag-documents found in Mubin's house who died in car explosion in Coimbatore
× RELATED “சாதிக்க வயது தடையில்லை”: பளு தூக்கும்...