மாநகர பஸ்சை மறித்து நடனமாடி வீடியோ 3 மாணவர்களுக்கு நூதன தண்டனை: துணை ஆணையர் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: மாநகர பஸ்சை மறித்து, அதன் முன்பு நடனமாடி வீடியோ எடுத்த 3 மாணவர்களுக்கு நூதன தண்டனை விதித்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் உத்தரவிட்டார். இன்றைய இளைஞர்களில் 90 சதவீதம் பேர் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள், தினசரி பல்வேறு விதமான வீடியோ, புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர். இதில், கிடைக்கும் லைக்ஸ்களுக்காகவே பலர் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

குறிப்பாக, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது, பைக் சாகசம் செய்து வீடியோ பதிவிடுவது, நீர்நிலைகளில் நின்று செல்பி, ரயில் நிலைய நடைமேடைகளில் கால்களை தேய்த்தபடி ரயிலில் பயணிப்பது போன்ற பல சாகச வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில், போலீஸ் வாகனத்தில் இருந்து கத்தியுடன் வருவது போல் வீடியோ பதிவிட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, ஒரு வாரம் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும், என உத்தரவிட்டனர். இதுபோன்ற அத்து மீறலில் ஈடுபடும் வாலிபர்களுக்கு சமீப காலமாக நூதன தண்டனை வழக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது வடசென்னையில் நடைபெற்றுள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் அருகே சூரிய நாராயணன் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் (தடம் எண் 101) மாநகர பேருந்தை வழிமறித்து 3 இளைஞர்கள், பேருந்தின் முன் நடனமாடியபடி வீடியோ பதிவிட்டனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அவ்வழியாக பயணித்த சமூக ஆர்வலர் ஒருவர், இதை வீடியோ எடுத்து இது பொதுமக்களுக்கு தொல்லை இல்லையா என காவல் துறையினருக்கு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அந்த வீடியோ பதிவை வைத்து விசாரித்தனர்.

அதில், புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தேசிய நகர் பகுதியை சேர்ந்த வருண் (19) என்பதும், இவர்கள் தனியார் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த ஹரீஷ் (20)  எஸ்ஆர்எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருவதும் தெரிந்தது. இவர்கள் 3 பேரையும் வண்ணாரப்பேட்டை காவல் துனை ஆணையர் பவுன்குமார் ரெட்டி முன்பு ஆஜர்படுத்தி, பின்னர் இவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.2000 ஆயிரம் அபராதமும், புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயணன் சாலையில் போக்குவரத்து சீரமைக்க வேண்டும் என்றும் நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, 3 பேரும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து 2 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த நூதன தண்டனை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: