கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.71.81 கோடியில் புதிய கட்டிடம் 220 படுக்கைகளுடன் அமைகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் 220 படுக்கைகளுடன் புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 3ம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதில் ரூ.71.81 கோடி நிதி ஒதுக்கீட்டில் 220 படுக்கை வசதிகள் கொண்ட தரை தளம், மூன்று தளங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. பெரியார் நகர், அரசு புறநகர் மருத்துவமனை 34 ஆண்டுகளாக 100 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது.

கடந்த 2021ல் ரூ.15.52 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 100 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த மருத்துவமனை 300 படுக்கைகளுடன் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சிடி ஸ்கேன்,  கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதியும் அமைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக இந்த மருத்துவமனை கூடுதல் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுடன் 83 நாட்களில் தரம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 நாள் சாதனையை விளக்கும் வகையில் மருத்துவமனை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: இந்த ஆண்டு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பின்படி  கூடுதல் கட்டிடத்தில் 220 படுக்கை வசதிகளை கொண்ட தரை தளம், மூன்று தளங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைப்பதற்காக ரூ.71.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள்  பிரிவு, காந்த அதிர்வு அலை மற்றும் ஆய்வகம் சுமார் 16,760 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, ரத்த வங்கி, அறுவைச் சிகிச்சைக் கூடம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் சுமார் 31,506 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இரண்டாம் தளத்தில் முழு உடல் பரிசோதனை, ஆண் மற்றும் பெண் சிகிச்சை அறைகள், காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் கட்டண அறைகள் சுமார் 31,506 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மூன்றாம் தளத்தில், இதர மருத்துவம் சார்ந்த கட்டிடம் சுமார் 31,506 சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் கட்டிடத்தின் பரப்பளவு 1,11,278 சதுர அடியில் அமைய உள்ளது.

புதிதாக கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்தில் மின்தூக்கி வசதிகள் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீ தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். புதிய கட்டிடத்தில் மின்தூக்கி வசதிகள் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீ தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு  மற்றும் மறுசுழற்சி கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.

தளம்    பிரிவுகள்    பரப்பளவு

தரை தளம்    அவசர மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள்  பிரிவு, காந்த அதிர்வு அலை  மற்றும் ஆய்வகம்    16,760 சதுர அடி.

முதல் தளம்    மகப்பேறு பிரிவு,  ரத்த வங்கி, அறுவை சிகிச்சை கூடம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள்    31,506 சதுர அடி.

2ம் தளம்    முழு உடல் பரிசோதனை, ஆண் மற்றும் பெண் சிகிச்சை அறைகள், காது, மூக்கு,  தொண்டை பிரிவு மற்றும் கட்டண அறைகள்    31,506 சதுர அடி.

3ம்  தளம்    இதர மருத்துவம் சார்ந்த பிரிவுகள்    31,506 சதுர அடி.

Related Stories: