×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்: பயணிகள் பாராட்டு

அண்ணா நகர்: வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னை உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியே வரமுடியாமல் தவிக்கும்  ஏழை எளிய மக்களை கோயம்பேடு போலீசார் நேரில் சென்று பார்த்து, ஆறுதல் கூறி, அவர்ளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களை மழையில் நனைந்தபடி வீடு வீடாக சென்று சந்தித்த போலீசார், அவர்களது குறைகளை கேட்டறிந்து, கடந்த 2 நாட்களாக உணவு பொட்டலங்கள், பால், பிஸ்கெட், ரொட்டி போன்றவற்றை வழங்கி வந்தனர்.

மேலும், அப்பகுதி மக்களிடம் உங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து வெளியே வர முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டால், அத்தியவாசி பொருட்கள் வேண்டும் என்றால், எங்களை செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் கூறிய போலீசார், அவர்களது செல்போன் நம்பரை கொடுத்தனர். இந்நிலையில், கோயம்பேடு பேருந்துநிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு  கோயம்பேடு பேருந்து நிலைய ஆய்வாளர் குணசேகரன், குற்றபிரிவு ஆய்வாளர் உமாமகேஷ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் போலீசார் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். போலீசாரின் இந்த மனிதநேய செயலை, பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags : Koyambedu , Cops who served food to destitute elderly at Koyambedu bus stand: Passengers praise
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...