பாஜ மாவட்ட தலைவர் கைது

சென்னை: அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணலி புதுநகர், பழைய நாப்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாஜ மேற்கு மாவட்ட பட்டியலின மாவட்ட தலைவர் குபேந்திரன் (37). இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் காரில் வரும்போது திடீரென்று பழைய நாப்பாளையம் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து தனியாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குபேந்திரன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை எடுக்குமாறு கூறினர். காரை எடுக்காததோடு போலீசாரிடமும் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வெகு நேரத்துக்கு பின் போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து குபேந்திரன் மீது மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். பிறகு புழல் சிறையில் அடைத்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: