சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். கடந்த 1940 முதல் 1944ம் ஆண்டு வரை கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கமானது 8458 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 35 அடி உயரமும் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983ம் ஆண்டு தமிழக - ஆந்திர அரசு கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட் வரை 152 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது. தமிழக ஆந்திர அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின்படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை முதல் தவணையாக 8 டிஎம்சி தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.
இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளுக்கேற்ப ஜூன் 14ம் தேதியே நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தில் மண் அரிப்பை தடுக்க கல் பொருத்துவது மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தண்ணீர் செல்ல மதகு அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதை முன்னிட்டு நீர் திறப்பதை நிறுத்துமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கண்டலேறு அணையின் மொத்தக் கொள்ளளவான 68 டிஎம்சியில் தற்போது 53.27 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தற்போது மீண்டும் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்தால் பூண்டி நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படுமா, எந்தெந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தண்ணீர் வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகளான துணை செயற்பொறியாளர் ஓபுல்தாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சந்திரமோகன், வெங்கடேஸ்வர்லு, பென்சிலையா ஆகியோர் நேற்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
ரூ. 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பெரும்பாலும் முடிவடைந்ததால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்தால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தெலுங்கு, கங்கை திட்ட ஆந்திர அதிகாரிகளிடம் கேட்ட போது, சீரமைப்பு பணிகள் அடுத்த 10 நாளில் பூர்த்தி அடைந்த பிறகு கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என தெரிவித்தனர்.
